Total Pageviews

Sunday, February 7, 2016

கந்தர் அலங்காரம் 91 , 93 , 100








கருமான் மருகனைச் செம்மான் மகளைக் களவுகொண்டு
   
வருமா குலவனைச் சேவற்கைக் கோளனை வானமுய்யப்
      
பொருமா வினைச்செற்ற போர்வேல னைக்கன்னிப் பூகமுடன்
         
தருமா மருவுசெங் கோடனை வாழ்த்துகை சாலநன்றே.   ...     91 


அருவ இறைவனின் சகல வெளிப்பாடுகளும் நாராயணனுக்குள் அடக்கம் . ஆகவே பூமிக்குரிய வாழ்வுக்கு எது நமக்கு கிடைத்தாலும் அது நாராயணனிடமிருந்தே கிடைக்கிறது அவன் லக்ஷ்மியை தனது உந்திக்கமலத்தில் ஏந்திக்கொண்டு சகலருக்கும் வாழ்வளித்துக்கொண்டிருக்கிறான்

ஆகவே அருணகிரியார் தருமான் என காப்ரியேல் என்ற நாராயணனை விளிக்கிறார் கரிய நிறத்தினனான கருமானும் அவனே . அவன் மருகன் முருகன் .  

இந்திரன் என்பது நிரந்தர பதவியல்ல ; இந்திரலோகமும் ஒரு  இடைப்பட்ட லோகமே தவிர கடவுளின் இருப்பிடமுமல்ல ; அருவ ஏக இறைவனை நாராயணன் இருப்பிடமான வைகுண்டத்தை சேர்ந்த பிறகே நேரடியாக தரிசிக்க முடிந்து அவரை கிட்டி சேர முடியும்

பரலோகத்தில் ஏழு லோகங்கள் அல்லது வானம் உள்ளதாக சகல மதங்களும் அறிவிக்கின்றன

இந்த இடைப்பட்ட லோகங்களுக்கு புண்ணியம் செய்த ஆத்மாக்கள் அவரவர் புண்ணியத்திற்கு ஏற்ப சிறிது காலம் சென்றுவிட்டு புண்ணியம் தீர்ந்ததும் மீண்டும் பூமியில் பிறக்கிறார்கள்

புண்ணியம் பாவம் ; நன்மை தீமை இரண்டும் அற்ற மனநிலை அதாவது சகலத்தையும் இறைவனின் சொற்கேட்டு இறைவனின் சித்தம் செய்து ; தான் செய்த அனைத்தையும் இறைவனுக்கே அர்ப்பணித்து நான் கருவி என மட்டும் சாட்சியாக வாழும் மனநிலை கர்மயோகம் ஒரு மனிதனின் ஆத்மாவில் விளைந்தாலன்றி அவன் கடவுளை தரிசிக்கும் பாக்கியம் பெற முடியாது வைகுண்டம் செல்லமுடியாது ஒளி சரீரம் பெற்றுக்கொள்ள முடியாது

புண்ணியம் என்பதும் கடவுளை அடைய ஒரு தடையே . செல்வந்தர்கள் சிலர் களிவிரக்கம் கொண்டு புண்ணியம் மிகுதியாக செய்கிறார்கள் . மரணத்திற்கு பின்பு அந்த ஆத்மாக்கள் இந்திரலோகம் சென்று சந்தோசத்தை அனுபவித்து தீர்த்துவிடும் . அப்படிப்பட்ட இந்திரலோக வாசிகளில் ஒருவரே இந்திரனாகவும் இருப்பார் . இந்திரன் நிரந்தரமானவனல்ல ஆனாலும் அவன் நல்லவன் ஆகவே அவனை செம்மான் என்கிறார் அருணகிரியார்

இந்த செம்மானின் புண்ணியத்தையும் அவனை விடவைத்து சகலத்தையும் கடவுளுக்கு அர்ப்பணித்த கர்மயோக மனநிலையை அவனுக்கு ஞானத்தின் அதிபதியான முருகனே கற்றுத்தரவேண்டும் . அதற்கு என்ன செய்கிறாராம் . அவனின் புண்ணியமான மகளை தேவயானியை திருடுகிறாராம் புண்ணியத்தை புடிங்கிக்கொள்வது சமப்படுத்துவது

இப்போது பாடலுக்கு வருவோம் முருகன் நாராயணனின் மருகன் இந்திரனின் புண்ணியத்தை மகளை களவு கொண்டு அவனுக்கு ஞானத்தை கற்றுத்தரும் புலவன் . கன்னியர்களை கவர்ந்திளுக்கிறவன் . அதென்னவென்றால் ஒருபுறம் குரத்திகளைப்போன்ற உலகாதாய மனிதர்களை தேடி வந்து வம்பு செய்து ஆன்ம வாழ்வுக்குள் நடத்துபவனும் அவனே ; மறுபுறமோ புண்ணியவான்களின் பாவபுண்ணியங்களை சமப்படுத்துபவனும் அவனே . ஆன்மாக்களை விளிப்படைய செய்யும் தொழிலை செய்ய அவன் சேவல்களைப்போன்ற குருமார்கள் பலருக்கு ஆக்கமும் ஊக்கமும் கொடுக்கிறான்  

மண்கம ழுந்தித் திருமால் வலம்புரி யோசையந்த
   
விண்கமழ் சோலையும் வாவியுங் கேட்டது வேலெடுத்துத்
      
திண்கிரி சிந்த விளையாடும் பிள்ளைத் திருவரையிற்
         
கிண்கிணி யோசை பதினா லுலகமுங் கேட்டதுவே.   ...     93 

அருணகிரிநாதர் சைவமரபில் உதித்தவர் ; ஆனாலும் வேலால் எழுதப்பட்ட அவரது நாவால் அருள்நிலையில் பாடல்கள் வெளிப்படும்போது அவரின் பாடல்களில் சிவனைக்காட்டிலும் நாராயணனைப்பற்றியே அதிகம் வரிகள் இருக்கும் . இது எதனால் என்றால் பரலோகத்தில் முருகன் நாராயணனில் ஒரு அம்சமான ஆதிசேஷன் . ஞானத்தின் அதிபதி பரலோகத்திலும் சரி பூமியிலும் சரி ஆதிசேஷனின் அவதாரங்கள் சத்ரிய அரசர்களின் அக்கிரம ஆணவங்களை அடக்கும் பணியையே செய்வார் . அதாவது ரஜோ குணத்தை அடக்கி சத்வ குணத்திற்கு ஞானத்திற்கு பக்க பலமாக இருப்பார்

பரலோகத்தில் தேவர்களில் சிலர் கடவுளுக்கு விரோதமாக கலகம் செய்து அசுரர்கள் ஆனபோது அவர்களை அடக்கி ஒடுக்கி ஏழாவது வானத்திற்கும் பூமிக்கும் விரட்டியடித்த பணியை தேவ சேனாதிபதியாக ஆதிசேஷனின் ஒரு வியாபகமான செங்கோடன் முருகனே செய்தார் ஆகவே முருகன் அடிப்படையில் நாராயணனோடு சம்மந்தப்பட்டவர் என்ற உண்மையை அருணகிரியாரின் அருள்வார்த்தைகளில் நாம் உணரவேண்டும் அவர் பூமிக்கு வரும்போது மட்டுமே சிவகுமாரன் . உண்மையில் முருகன் சமரச வேதாந்தி

பழமுதிர்சோலை சென்றவர்களுக்கு தெரியும் . அங்கு நாம் நிற்கும்போது அதற்கு கொஞ்சம் மேலே மலை உச்சியில் உள்ள தீர்த்தத்தில் மனிதர்கள் நீராடும் சத்தமும் பேச்சுக்குரலும் சோலைக்குள்ளிருந்து மெல்ல கேட்கும் .

விண்கமழ் சோலையிலும் அந்த வாவியிலும் இருந்து பழமுதிர்சோலையில் கேட்கும் சத்தம் மண்ணை உண்டதால் மண்வாசனை அடிக்கும் வயிறை உடைய திருமாலின் வலம்புரி ஓசை போல இருக்கிறதாம் . என்ன அழகான ரசனை

கந்தரலங்காரம் முழுவதிலும் பல மேன்மையான விசயங்களை உணர்வுகளை பேசி வரும் அருணகிரியார் படக்கென்று பிள்ளைத்தமிழிலும் விழுந்துவிடுகிறார்

தமிழுக்கே உரித்தான மேன்மை பக்திக்கே உரித்தான மேன்மை பிள்ளைத்தமிழ்

எட்டமுடியாத மேன்மையான அதிதேவனை ஒரு குழந்தையை கொஞ்சுவதுபோல கொஞ்ச பக்தி சாதனத்தால் மட்டுமே முடியும் பக்தி செய்யும் போது நமக்கு எந்த தகுதியும் அவசியமே இல்லை . அன்பிருந்தால் போதுமானது உன்னதமான அன்பு பக்தி அசைக்க முடியாத நம்பிக்கை பக்தி அந்த அன்பே பிள்ளைத்தமிழின் அடிப்படை

தாய்மார்கள் ஒன்று கூடும் போது நீங்கள் கேட்டதில்லையா ; என் பிள்ளை அப்படி பண்ணிட்டான் இப்படி பண்ணிட்டான் என்று ஒன்றுமேயில்லாத விசயங்களை பெருமையாக பேசிக்கொள்வார்கள் இல்லையா ; அப்படித்தான் அருணகிரிக்கும் உணர்வு உண்டாயிற்று . பழமுதிர்சோலையில் குழந்தை முருகன் கையில் வேலை வைத்துக்கொண்டு அதில் கட்டியுள்ள மணிகள் சிந்தி ஓடும்படியாக அங்கும் இங்கும் தட்டி விளையாடிக்கொண்டிருக்கிறதாம் . அப்படி குழந்தை அங்கும் இங்கும் ஓடும்போது பிள்ளையின் இடுப்பில் கட்டியுள்ள ஒட்டியாணத்தில் இணைக்கப்பட்டுள்ள கிண்கினிகளின் ஓசை ஈரேழு பதினாலு உலகமும் கேட்கிறதாம்


இடுதலைச் சற்றுங் கருதேனைப் போதமி லேனையன்பாற்
   
கெடுதலி லாத்தொண் டரிற்கூட் டியவா! கிரெளஞ்ச வெற்பை
      
அடுதலைச் சாதித்த வேலோன் பிறவி யறவிச்சிறை
         
விடுதலைப் பட்டது விட்டது பாச வினைவிலங்கே.   ...    100   

மனிதர்கள் எவ்வளவு நற்செயல்கள் செய்திருந்தாலும் இறைவன் சமுகத்தில் நான் இதை செய்தேன் அதை செய்தேன் எனவே நீ உதவித்தான் ஆகவேண்டும் என கேட்க முடியாது . சுயநீதி என்பது தவிர்க்கப்படவேண்டிய ஒரு கெட்டகுணம் .

தாழ்மை ஒன்றே அடையப்படவேண்டியது . அருணகிரியாரும் பாருங்கள் பிறருக்கு முடிந்தளவு தானம் செய்யவேண்டும் என்ற கருத்து இல்லாதவன் நல்லறிவு இல்லாதவன் நான் என்கிறார் . ஆனால் இறைவன் என்ன செய்தாரம் தனது பேரன்பால் கெடுதலே செய்யாத தொண்டர்கள் கூட்டத்தை அவருக்கு கொடுத்தாராம் . நல்ல நண்பர்களை நாம் தேடிக்கொள்ள முடியாது நல்ல தொண்டர்களையும் குருமார்கள் தேடிக்கொள்ள முடியாது ஆனால் கிரெளஞ்ச மலை என்ற மாயமலையை அழித்த சாதனையை சாதித்த வெற்றி வேலை உடைய முருகன் சற்குருநாதன் மனது வைத்தால் எல்லாமே சாதனையாகுமாம் . எதுவரை என்றால் பிறவி என்ற சிறையையும் நன்மை தீமை என்ற சம்ஸ்காரங்களால் ஆத்மாவை பீடித்திருக்கும்  பாசவிலங்கையும் முருகனின் வேல் உடைத்து விடுதலையை அருணகிரியாருக்கு கொடுத்ததாம்

ஆம் அவைகள் சத்தியமான வார்த்தைகள்

அருணகிரியார் மரணமில்லாபெருவாழ்வு ஒளி சரீரம் பெற்ற பின்பே பரலோகத்தில் இருந்து பாரிஜாத மலரை மன்னனுக்கு கிளிரூபத்தில் கொண்டு வந்து கொடுத்தார் . பின்பு நிறைவாக உலகமக்களுக்கு செய்தியாகவும் முருகனுக்கு பக்திபாமாலை சூட்டும் விதமாகவும் கந்தரலங்காரம் 100 பாடல்களை பாடியருளினார்

திருவண்ணாமலை கிழக்கு வாயிலின் அருகில் உள்ள ஆறுமுகன் சந்நிதியில் அவன் தோளில் கிளியாக அமர்ந்தவாறு மனித குரலில் இப்பாடல்கள் இசைக்கப்பட்டது

இந்த  100 பாடல்களும் ஞானப்பொக்கிஷங்கள் . அடுக்கு தமிழில் பாடப்பட்டவை . இன்றைய காலத்தில் வாசித்து மட்டும் புரிந்துகொள்வது மிகவும் கடினமானது

ஆனாலும் முருகனின் கிருபையால் தமிழுக்கு கிடைத்த கலைப்பெட்டகமான சீர்காழி கோவிந்தராஜன் அவர்கள் உணர்வோடும் தெளிவோடும் சில பாடல்களை மட்டும் தேர்ந்தெடுத்து பாடியுள்ளார் பெரும்பேறான தொண்டு அது

இப்பாடல்களை திரும்ப திரும்ப கேட்டால் நம் பக்தி ஞானம் அளவில்லாமல் பெருகும் . எனக்கு உணர்த்தப்பட்ட அளவில் இவற்றின் பொருளை எழுத முனைந்துள்ளேன் . முடிந்தளவு புரிந்துகொண்டு இசையை திரும்ப திரும்ப கேட்டு மேன்மையடையுங்கள் என அதிதேவர் நால்வர் நாமத்தினால் வாழ்த்துகிறேன்   

நாராயணனாக வெளிப்பட்ட ஓரிறைவனையே நமஸ்கரிக்கிறோம்
ஓம் நமோ நாராயணனாய

ஆதிசேஷனாக வெளிப்பட்ட ஓரிறைவனையே நமஸ்கரிக்கிறோம்
ஓம் நமோ ஆதிசேஷாய

நாராயணியாக வெளிப்பட்ட ஓரிறைவனையே நமஸ்கரிக்கிறோம்
ஓம் நமோ நாராயணியாய

சிவனாக வெளிப்பட்ட ஓரிறைவனையே நமஸ்கரிக்கிறோம்
ஓம் நமோ சிவாய

அருட்பெருஞ்சோதி அருட்பெருஞ்சோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்சோதி























No comments:

Post a Comment