Total Pageviews

Sunday, February 7, 2016

கந்தர் அலங்காரம் 1 , 6 ,8







 பேற்றைத் தவஞ்சற்று மில்லாத வென்னைப்ர பஞ்சமென்னும்
   சேற்றைக் கழிய வழிவிட்ட வா! செஞ் சடாடவிமேல்
      
ஆற்றைப் பணியை யிதழியைத் தும்பையை யம்புலியின்
         
கீற்றைப் புனைந்த பெருமான் குமாரன் க்ருபாகரனே.   ...      1 

பிரபஞ்சம் என்ற சேற்றை கடந்து சென்றால் மட்டுமே ஒரு ஆத்மா ஒளி சரீரம் உடையதாக பரலோகத்தில் நுழைய முடியும் .

ஆனால் அது அவ்வளவு லெகுவான காரியமா ? பிரபஞ்சம் என்ற மாயையோ களிமண்ணால் ஆன சேறு . அது பிசு பிசுவென நம் ஆத்மாவில் ஒட்டிக்கொண்டு மனதில் எண்ணத்தை தூண்டிவிடும் ஏதாவது ஒரு கட்டுக்குள் கட்டிவைக்கவே முயற்சி செய்யும் .

தியானம் ; தவம் ; மனசமநிலை இருமைகளை வென்று நன்மை தீமைகளை கடந்த நிலை அவ்வளவு லேசானது அல்ல . யோகாப்பியசங்கள் செய்வது மனதை கட்டுப்படுத்த ஓரளவு பக்குவம் கொடுக்குமேயன்றி மனம் நிலைவரப்படுதல் என்பது பாவங்கள் கழிவது மற்றும் இறைசித்தம் கிருபை இல்லாமல் நடக்கவே முடியாது . பல பிறவி தவத்தில் மட்டுமே அதை அடையமுடியும் . பேற்றைத்தவம் என்கிற வார்த்தையை அருணகிரியார் இங்கு பயன்படுத்துகிறாரே பல பிறவி பயிற்சியில் உண்டாகும் பேறாகிய தவம் – பேற்றைத்தவம்


ஆன்மீகவாழ்வு ஒரு நாளில் ஒரு குருவழியில் ஒரு பிறவியில் அடையவே முடியாது . ஆனாலும் அடைந்துவிடலாம் அடைந்துவிடலாம் என்று நம்பிக்கையோடுதான் சொல்வார்கள் ; அதற்கு அர்த்தம் இந்த சீட்டு உனக்கு பாதையை இலக்கை நிச்சயமாக எப்பிறவியிலாவது காட்டாமல் விடாது என்பதுதான் .

ஒருமைக்கண் தான் கற்ற கல்வி
எழுமைக்கும் ஏமாப் புடைத்து
என்றொரு குறளை கூட வாசித்திருப்பீர்கள் . அது மனித ஆத்மா கற்றுக்கொண்ட ஞானம் எதுவும் வீண்போகாது . சந்தர்ப்ப சூழ்நிலையில் அது இல்லாததுபோல இருக்கும் ; ஆனால் அது ஏற்ற சமயத்தில் வெளிவந்து நம் ஆத்மாவை மேன்மைப்படுத்தாது விடாது . ஆன்மிக வாழ்வில் தோல்விகள் பல நேர்ந்தாலும் அவன் இரண்டும் கெட்டான் போல தெரிந்தாலும் அது உண்மையல்ல ; அடுத்த பிறவியில் நல்ல சூழலில் நல்ல குடுமபத்தில் பிறந்து பல படி முன்னேற்றம் உண்டாகும் என்பது யுகபுருஷன் கிரிஷ்ணரின் வாக்கு . ஆகவே துவண்டு விடாது தோல்விகள் வீழ்ச்சிகள் பற்றி கலங்காது கடவுளிடம் மன்னிப்பு கேட்டுக்கொண்டே தொடரவேண்டும் . தடுமாறி விழுவது தவிர்க்க இயலாது ; அதற்காக கடவுள் நம்மை ஒதுக்கி வைத்து விடுவதில்லை . ஆனால் பட்டறிவு ஆத்மாவில் விளைந்து வைரமாக வேண்டுமானால் சில காலம் இடைவெளி உண்டாகும் . உலக போக்கில் நம்மை அனுபவிக்கவும் விட்டு சொட்டென்று பொறியில் தட்டி மாற்றுவது கடவுளுக்கு கைவந்த கலை .

அருணகிரியாரின் அந்தப்பிறவி வாழ்வும் அப்படித்தான் இருந்தது . பிறந்த நாளில் இருந்து பெண் பித்து . விதவிதமான பெண்களின் சரீரங்களை ஆராய்ச்சி செய்வதே வேலையாகவும் இருந்தது ; போதிய பணமும் இருந்தது

அப்பா அம்மா பேச்சை கேட்காமல் ; வேலை வெட்டிக்கு போகாமால் குடும்பத்தின் ஆஸ்தியை மைனர் குஞ்சு வேலையை செய்து கணிகையரிடம் காமத்தை அனுபவித்துக்கொண்டிருந்தார் பெண் கொடுப்பார் இல்லாத அளவு பிரபலம் . மனம் நொந்து பெற்றோர்கள் இறந்து விட்டனர் . தொழு நோயும் வந்து விட்டது . காசெல்லாம் கரைந்தும் விட்டது . கணிகையர் காசில்லாமல் வராதே என துரத்தியும் விட்டனர் .அப்போதும் காமம் போதும் என நிறைவடைந்த பாடில்லை . இந்தக்காமம் இருக்கிறதே அது அடிப்படையில் ஒரு சாபம் . அது எப்போதும் நிறைவடையவே நிறைவடையாது . ஒன்றுமில்லாத வெற்று மாயை ; நம்மை மயக்கி ஆட்டிப்படைத்துக்கொண்டுள்ளது என்று தெளிந்து தேர்ந்தால் ஒழிய அவ்வளவு லேசில் விடாது ; ஏதாவது ஒரு பிசிறை வைத்து நம்மை வறுத்தெடுத்து விடும் . ஒன்றுமேயில்லை என்று உணர்வதும் லெகுவல்ல ; அதற்கு நாமும் நொந்து வேண்டி இறைவனும் கிருபை அளித்தால் மட்டுமே சாத்தியம் .

அந்தப்போராட்ட அனுபவமே பிறக்குபோதே அண்ணகன் அதாவது ஆண்பெண் பேதத்தை கடந்தவன் என்ற பக்குவத்தோடு நம்மை பிறக்கவைக்கும் – வள்ளலாரைப்போல .

குஷ்ட்டம் வந்து பார்ப்போர் அருவெறுத்து துரத்தியடித்தும் அருணகிரிக்கு காமம் கடந்தபாடில்லை . பணம் இருந்தால் போகலாம் என பணம் கேட்டு உடன்பிறந்த அக்காவை அண்டி நச்சரித்தார்

ஆஸ்தியெல்லாம் தொலைந்து விட்டது . குடும்பத்தின் பேரும் சீரழிந்துவிட்டது . ஊரே சந்தி சிரித்து நொந்து நூலாகி தாய்தகப்பனும் இறந்துவிட்டனர் . பிறந்தவீடு தாழ்மையடைந்தால் எந்தப்பெண் தான் மனம் நோகாமல் இருப்பாள் . இலை மறை காயாக தம்பிக்கு பணம் உதவியும் அறிவுரை கூறியும் திருந்தாத ஜென்மத்தை பணம் கேட்டு வந்தவுடன் சட்டென்று ஒரு வார்த்தையால் இறைவன் ஒரு சொட்டு சொட்டினார்

இவ்வளவு கேவலப்பட்டும் இன்னமுமா உனக்கு பொம்பள உடம்பு கேட்குது . என்னைய கொன்னுட்டு பொம்பள உடம்ப அனுபவிச்சுக்கோ .

இறைவன் தடுத்தாட்கொண்டார் தடுத்தாட்கொண்டார் என்று படித்திருக்கிறோமே அது இப்படித்தான் . ஒரு மனிதனுக்கு அவனுக்கு உரைக்கும்படி ஒரு வார்த்தை தொடவேண்டும் . அப்படியே திருந்திவிடுவான் .

அந்த வார்த்தை அப்படியே அவரை போட்டுத்தாக்கியது . உள்ளம் தொடப்பட்டு நொறுங்கிப்போனார் . தன்னைப்பற்றிய இழிவுகளை அவராலேயே தாங்கிக்கொள்ள இயலவில்லை . இந்தப்பிறவி இவ்வளவு கேவலமாக முடிந்ததே ; அடுத்த பிறவியாவது நல்ல பிறவியை கொடு இறைவா என வேண்டிக்கொண்டே திருவண்ணாமலையின் வடக்கு கோபுரத்தில் ஏறினார் . ஏறி குதித்தும் விட்டார் .

தற்கொலை செய்துகொள்ளும் ஆத்மாக்கள் அதற்கும் ஒரு தண்டனையை அனுபவித்தே அடுத்த பிறவி எடுக்க முடியும் . அந்தக்கொடுமையையை அனுபவிப்பதை விட இப்பிறவி கொடுமையை அனுபவிப்பது எளிதானது . ஆகவே தற்கொலை என்பது தவிர்க்கப்பட வேண்டிய ஒன்று . தற்கொலை முயற்சி என்பதே இறைவனை நாடாமல் சுயத்திலே எடுக்கும் முயற்சி என்பதால் இறைவன் காக்க வருவதில்லை .

ஆனால் அருணகிரியை காக்க முருகன் வந்தார் என்றால் அதன் காரணம் ஒன்றே ஒன்றுதான் . அருணகிரியின் பேற்றைத்தவம் . முந்தய பிறவியில் அவர் செய்த தவங்களால் அவர் எல்லா பலகீனங்களையும் கடந்துவிட்டார் . ஆனால் காமம் ஒன்றைமட்டுமே அவர் கடரவில்லை . அந்த ஒன்றை கடர மட்டுமே இப்பிறவி வாய்த்தது .

எதற்காக அவருக்கு பிறவி உண்டானதோ அதில் வெம்பி வெதும்பி திருந்தியபோது அவரை நாடி சற்குருநாதர் முருகன் வந்தார் .

எசேக்கியேல் 18:32  மனந்திரும்புங்கள், அப்பொழுது பிழைப்பீர்கள்; சாகிறவனுடைய சாவை நான் விரும்புகிறதில்லை என்று கடவுள் சொல்லுகிறார்.

பாவங்களுக்கு பதிலுக்கு பதில் தண்டனை கொடுத்தே தீருவேன் என கடவுள் கறாராக இருப்பதில்லை . அவர் நம்மை வாட்டுவது நாம் திருந்தவேண்டும் என்ற நோக்கத்தில் மட்டுமே . கஷ்ட்டம் வரும்போதெல்லாம் இறைவா நான் உணரவேண்டியதை எனக்கு உணர்த்தி வைப்பாயாக . நான் திருந்தவேண்டியது எதுவோ அதை கற்றுக்கொள்ளும் திறனை தருவாயாக என்று நால்வர் நாமத்தினால் வேண்டிக்கொண்டே இருக்கவேண்டும் . மனம் திருந்தினால்போதும் அந்தக்கஷ்ட்டங்கள் விலகிவிடும் .

மனந்திரும்புவோருக்கு இறைவன் எப்போதும் சமீபமாக இருப்பார் . இது ஒரு ரகசியம்

அருணகிரிக்கு நேர்ந்தது இதுவே . அதுவும் அவரது ஆத்மாவில் இருந்த கடைசி பாவம் . அதில் குத்தப்பட்டு கடந்ததும் சற்குரு அவரை நாடி வந்தார்

இந்நிகழ்வை கந்தர அலங்காரத்தின் காப்பு பாடலாக அவரே பாடியுள்ளார் 

அடல் அருணைத் திருக்கோபுரத்தே அந்த வாயிலுக்கு
வட அருகில் சென்று கண்டு கொண்டேன் வருவார் தலையில்
தடபட எனப்படு குட்டுடன் சர்க்கரை மொக்கியகைக்
கடதட கும்பக் களிற்றுக்கு இளைய களிற்றினையே!



அப்படி இப்படி என்னை ஏன் காப்பாற்றினீர்கள் என்று அலட்டியபோது அவர் சொன்ன ஒரே ஒரு வார்த்தை சும்மாயிரு .

ஏற்ற சமயத்தில் குருவின் வார்த்தை வந்ததும் அவர் அப்படியே நிஷ்ட்டையில் ஆழ்ந்துவிட்டார் . அவரை மீண்டும் முருகன் எழுப்பும்வரை பல நாட்கள் நிஷ்ட்டை வாய்த்தது . அது எவ்வளவு நாட்கள் என்று அவரும் அறியார் . குஷ்ட்டம் நீங்கி சொஸ்த்தம் ஆனது . உள்ளமும் தூய்மையடைந்தது . இறைவன் நாடினாலன்றி தவம் சித்தியளிக்காது

அண்ணாமலையில் மேற்குப்பக்கம் ஒரு முருகன் கோவில் உள்ளது . அந்தக்கோவில் இருக்கும் இடத்தில்தான் அருணகிரியார் ஆழ்ந்த நிஷ்ட்டை சித்தித்து ஞானியானார் . அவரை முருகன் எழுப்பி நாவில் வேலால் எழுதி பாடு எனப்பணித்தார்

ஆகவேதான் அடுக்குத்தமிழிலும் ஆழ்ந்த ஞானப்புலமையிலும் அருள்நிலையில் அவரது பாடல்கள் அருளப்பட்டன .

சித்தர்கள் பலர் மனித நிலையில் தாங்கள் உண்மை என நம்பியதை பாடியதில் பல மனித தவறுகள் உள்ளன . ஆனால் அருணகிரியார் பாடியவை அனைத்தும் அருள்நிலையில் வந்தவை

இந்த முதல் பாடலில் அவர் பேற்றைத்தவம் என்ற முதல்வரியை தொடங்குகிறார் . ஆனால் எவ்வளவுதான் தவம் இருந்தாலும் இறைவன் அருள் இல்லாவிட்டால் இந்த பிரபஞ்சத்தை கடர முடியுமா ? முடியவே முடியாது .

ஒவ்வொரு சின்ன சின்ன பாவத்திற்கு பத்து பிறவியெடுத்து கடர முடியாமல் அல்லாடிக்கொண்டே இருக்கவேண்டும்

இறைவன் நாடினாலோ நம்மால் கடந்துவிட முடியும் .

ஒரு குறிப்பிட்ட அளவுக்குமேல் ஆன்மீகத்தில் ஞானத்தில் வளர்ந்து விட்டால் மனித முயற்சி என்பது செல்லாக்காசு என்பதை இறைவன் பாடம் எடுத்துக்கொண்டே இருப்பார் . எவ்விசயத்திலும் பிச்சைக்காரனைப்போல அவரிடம் கேட்டுக்கொண்டிருந்தால் மட்டுமே எதுவும் நடக்கும் என்பதை திரும்ப திரும்ப புரியவைப்பார் . அப்போதுதான் முழுசரணாகதி என்ற நிலையை அடையமுடியும் .

ஞானத்தில் வளர்ந்த பிறகு முழு சரணாகதியை கற்றுக்கொள்ளும் நிலையில் மனித அறிவும் ஞானமும் செல்லாக்காசு என்பதை உணர்ந்து உணர்ந்து இறைவனுக்காக காத்திருக்கும் ஒரு பக்தி உண்டாகிறதே அதுவே பக்தியோக நிலை . ஆரம்ப கால பக்தி – சரியை வகைப்பட்ட பக்திக்கும் ஞான வளர்ச்சியால் உண்டாகும் பக்திக்கும் நிறைய வேறுபாடு உள்ளது .

பாவங்கள் அனைத்துமே கடந்த ஒரு ஆத்மா – சற்குருவே தேடி வந்து ஆட்கொண்ட ஒரு ஆத்மா – அருணகிரியார் என்ன சொல்கிறார் பாருங்கள்

பேற்றைத்தவம் சற்றும் இல்லாத என்னை பிரபஞ்சமென்னும் சேற்றை கழிய வழிவிட்டவா

சிவந்த சடாமுடியில் கங்கையை உறைந்த பணியை இதழியை – ரெட்டை நாக்கு உள்ள பாம்பை இதழி என்கிறார் தும்பையை பிறைச்சந்திரனை அணிந்துள்ளவரின் குமாரனே

பெரும்பைம் புனத்தினுட் சிற்றேனல் காக்கின்ற        பேதை கொங்கை
   
விரும்பும் குமரனை மெய்யன்பி னால்மெல்ல மெல்லவுள்ள
      
அரும்புந் தனிப்பர மானந்தத் தித்தித் தறிந்தவன்றே
         
கரும்புந் துவர்த்துச் செந்தேனும் புளித்தறக் கைத்ததுவே.   ...      6  

பெரிய அடர்ந்த வனமாகிய உலகம் கவர்ச்சிகரமான பல விசயங்களை தன்னகத்தே வைத்துள்ளது . அனுபவிக்க அனுபவிக்க குறையாத இன்பங்களை வாரி வாரி வழங்குகிறது . ஆனால் அதில் ரெம்ப ரெம்ப சாதாரணமான தினையை காவல் காக்கிராளாம் இந்த வள்ளி .

உலகம் நாளுக்கு நாள் எவ்வளவோ அறிவியல் முன்னேற்றங்களை அனுபோகங்களை வெளிப்படுத்திக்கொண்டிருக்கும் போது ; அதில் அக்கறை காட்டாமல் ஆன்மிகம் தியானம் தவம் வேதம் என்று அலைகிற கிராக்குகள் அங்கொன்றும் இங்கொன்றும் எப்போதும் சிறிய அளவில் இருந்து கொண்டுதான் இருப்பார்கள் . அதனால்தான் சிற்றே நெல் காக்கின்ற பேதைகள் என்கிறார் .

ஆனால் இந்த கிராக்குகளுக்கு வாய்த்த அதிர்ஷ்டம் என்னவென்றால் இவர்களையும் நேசிக்கும் ஒருவன் இருக்கிறான் ; அவனே ஆன்மீக சற்குரு . அனைத்து குருமார்களுக்கும் தத்துவங்களுக்கும் வேதங்களுக்கும் சத்தியங்களுக்கும் ரகசியங்களுக்கும் ஞானங்களுக்கும் அதிபதி முருகன் .

இந்த கிராக்குகளின் நற்குணங்கள் நல்லியல்புகள் மனித நேயங்கள் பரோபகாரங்கள் பக்திகள் வேண்டுதல்கள் ஆகியவற்றை வேறு அவன் விரும்பி அவர்களை பாராட்டி சீராட்டி கைதுக்கியும் விடுகிறவனாம் . பசுவின் பால் அதன் அமிர்தம் அல்லவா ? அப்படித்தான் ஆராவாரமற்ற இறை மனிதர்கள் இவ்வுலகத்திற்கு பைத்தியம் எனப்பட்டாலும் ஓரங்கட்டப்பட்டவர்களாக இருந்தாலும் உலக வாழ்வில் சாதுர்யமாக வாழாதவர்களாகவும் இருந்தாலும் இவர்கள் மீதுள்ள இறை அருளும் அன்பும் நேயமும் அவர்கள் வசிக்கும் இடங்களை மேன்மையுறச்செய்யும் . நல்லோருக்கு பெய்யும் மழை எல்லோருக்கும் பெய்யும் . அவர்கள் எந்த நெறியில் இருந்தாலும் எந்த குருகுலத்தில் இருந்தாலும் அவர்கள் அனைவரையும் தாங்கி தொடர்ந்து அன்பும் ஆதரவும் செய்து முன்னேற்றி விடும் சற்குருநாதர் முருகனே . நீங்கள் அறியாத ஒருவர் உங்களுடனே நிற்கிறார் என பைபிளிலும் கூட இவரைப்பற்றியே சொல்லப்பட்டுள்ளது

கிருதயுகத்தில் சிவனார் பூமியில் இருந்தபோதே இனி வரும் யுகங்களில் யுகங்கள் தோறும் பூமிக்கு அவதாரமாக வரும் சிவகுமாரனை குருவாக ஏற்று நடவுங்கள் என குருகீதையில் முன்னறிவிக்கப்பட்டவர் இவரே

அவர் வானவராக – தேவராக இருந்தும் தன் நிலையை மாற்றி பூமியில் மனிதனாக முருகி வருவதால் அவன் முருகன் என்று அடையாளப்படுத்தப்பட்டார் . அவன் அடிப்படையில் நாராயணன் ஆக இருந்தாலும் பூமியில் மனிதனாக சிவனுக்கு குமாரனாக வருவதால் அவன் ஹரிஹரன் . இந்த ஹரிஹரா என்பதுவே காலப்போக்கில் அரோகரா அரோகரா என கோஷம் போடுவதாக மாறிவிட்டது .

சிவனார் முன்னறிவித்தபடி திரேதாயுகத்தில் ராமராகவும் துவாபாரயுகத்தில் கிரிஷ்ணராகவும் கலியுகத்தில் யேசுவாகவும் வந்தவரே முருகன் .

அப்படி யுகங்கள் தோறும் பாமரர்களை நேசித்து அவதாரங்கள் காட்டிய அன்பை சாதனைகளை கதை கதையாக பக்தர்கள் கேட்டும் படித்தும் உணர்ந்தும் தங்கள் பக்தியை விருத்தி செய்துகொள்கின்றனர்

தங்களின் மெய் அன்பினால் அந்த அவதாரங்களை (குரானால் மலக்கு தூதர்கள்) அவர்களின் பின்தொடர்பாக மனிதனாக இருந்து கடவுளை நெருங்கியதால் இறைவனால் பயன்படுத்தப்பட்ட இறைதூதர்களை மெல்ல மெல்ல உள்வாங்குகிறார்கள் . குருகுலமும் குரு பாராம்பரியமும் எப்போதும் பக்தர்களை அரவனைத்துக்கொண்டுதான் உள்ளன . ஆவிமண்டல சக்திகளும் தங்கள் தங்கள் குருகுலத்திலுள்ள மனிதர்களை எப்போதும் போஷித்தே வருகின்றன

இந்த உள்ளார்ந்த அன்பு மெல்ல மெல்ல பரலோகத்தின் பரமானந்தத்தை ஒவ்வொரு பக்தர்களையும் ருசி பார்க்கவைக்கிறது . கடவுளின் பேரன்பு பரமானந்தமாக வளர வளர ஆத்மா முழுமையை நெருங்குகிறது .

உலக சிற்றின்பங்கள் அரக்கைத்து விடும் . அதாவது அது அவசியமற்றதாக மாறிவிடுகிறது ; அல்லது அதன் மாயைகளால் பாதிப்படையாத நிர்வாண நிலை – நிர்மால்யம் – நிஷ்களங்கம் – பரிசுத்தம் – நிலைத்ததன்மை உண்டாகும் .

விடுதலை பெற்ற ஆத்மா உலகின் கட்டுகளை அறுத்தெறிந்து வீடுபேறடைகிறது .

இங்கு ஒரு ரகசியம் மறைபொருளாக உள்ளது . பட்டினத்தடிகள் அநுபூதி அடைந்ததற்கு அடையாளம் சுட்டப்படுகிறது . அவர் அநுபூதி அடையும் நாள் கரும்பு துவர்க்கும் செந்தேன் புளிக்கும் என முன்னறிவிக்கப்பட்டது .

முன்னொருகாலத்தில் சோழ நாட்டு தலைநகரம் காவிரிப்பூம்பட்டினத்தில் சிவநேசர், ஞானகமலாம்பிகை என்னும் சிவபக்த தம்பதியர் வசித்து வந்தனர். இவர்களுக்கு சிவனருளால் ஒரு மகன் பிறந்தார். திருவெண்காடர் என்று அழைக்கப்பட்ட இவரும் சிறந்த சிவபக்தர். கடல் கடந்து வாணிபம் செய்யும் பணி செய்து வந்த இவர், தனது 16ம் வயதில் சிவகலை என்பவரை மணந்து கொண்டார். திருமணமாகி பல்லாண்டுகளாக இத்தம்பதியருக்கு குழந்தை இல்லை. திருவெண்காடர் சிவனை வழிபட்டு, புத்திரப்பேறு அருளும்படி வேண்டினார்.

இதனிடையே சிவசருமர், சுசீலை என்னும் மற்றொரு சிவபக்த தம்பதியினருக்கு சிவனே மகனாக பிறந்தார். குழந்தைக்கு மருதவாணர் என பெயரிட்டு சீரும், சிறப்புமாக வளர்த்தனர். சிவனுக்கு சேவை செய்தே வறுமையில் வாடிய இத்தம்பதியரால், ஒருகட்டத்தில் குழந்தையை சரியாக வளர்க்க முடியவில்லை. திருவெண்காடர், சிவசருமர் தம்பதிக்கு அருள் செய்ய எண்ணம் கொண்டார் சிவன். சிவசருமரின் கனவில் தோன்றிய சிவன், மருதவாணரை திருவெண்காடருக்கு தத்து கொடுத்து, பதிலாக பொருள் பெற்றுக்கொள்ளும்படி கூறினார். அதேசமயம் திருவெண்காடரின் கனவில் தோன்றிய சிவன், மருதவாணரை வளர்க்கும்படி கூறினார். அதன்படி திருவெண்காடர், மருதவாணரை தத்தெடுத்து வளர்த்தார்.

மருதவாணரும் தந்தையின் தொழிலையே செய்தார். ஒருசமயம் மருதவாணர், கடல் கடந்து வாணிபம் செய்துவிட்டு ஊர் திரும்பினார். தாயாரிடம் ஒரு பெட்டியை மட்டும் கொடுத்த அவர், ஒன்றும் சொல்லாமல் வீட்டை விட்டு சென்றுவிட்டார்.  இதனிடையே வெளியே சென்றிருந்த திருவெண்காடர், மகன் சம்பாதித்து வந்திருப்பதை காண பெட்டியைத் திறந்தார். அதில் தவிட்டு உமிகளைக் கொண்டு செய்யப்பட்ட எரு மட்டும் இருந்தது. கோபம் கொண்ட அவர், எருவை வீசியெறிந்தார். அதற்குள், ""காதற்ற ஊசியும் வாராது காண் கடைவழிக்கே'' என்று எழுதப்பட்ட காகிதத்தைக் கண்டார்.

திருவெண்காடருக்கு ஏதோ சுரீர் என்று உரைத்தது. ""மனிதன் எவ்வளவுதான் சம்பாதித்தாலும் கடைசியில் பயனில்லாத காதற்ற ஊசியைக்கூட கையில் கொண்டு செல்ல முடியாது,'' என்று உணர்ந்தார். உடன் இல்லற வாழ்க்கையை துறந்த அவர், சிவனை வணங்கி முக்தி கொடுக்கும்படி வேண்டினார். அவருக்கு காட்சி தந்த சிவன், தகுந்த காலத்தில் முக்தி கிடைக்கும் என்றார். அதன்பின் சிவத்தல யாத்திரை சென்ற திருவெண்காடர். காவிரிப்பூம்பட்டினத்தில் பிறந்தவர் என்பதால், "பட்டினத்தார்' என்றழைக்கப்பட்டார். காசியை ஆட்சி செய்த பத்ரகிரியார் என்னும் மன்னனை தனது சீடனாக ஏற்றுக்கொண்டார். திருவிடைமருதூர் தலத்தில் இருவரும் சிலகாலம் தங்கியிருந்தனர். சிவன் பத்ரகிரியாருக்கு முதலில் காட்சி கொடுத்து முக்தி கொடுத்தார். பட்டினத்தார் தனக்கும் முக்தி வேண்டவே ஒரு கரும்பை கொடுத்து, அதன் நுனி இனிக்கும் இடத்தில் முக்தி தருவதாக கூறினார். அதன்பின் பல தலங்களுக்குச் சென்ற பட்டினத்தார்  திருவெற்றியூர் தலத்திற்கு வந்தபோது நுனிக்கரும்பு இனித்தது. இங்கிருந்த சிலரை அழைத்த அவர், தன்னை ஒரு பாத்திரத்தால் மூடும்படி கூறினார். அவர்களும் அவ்வாறு செய்யவே, லிங்க வடிவமாக மாறி முக்தி பெற்றார். 

பட்டினத்தடிகள் கப்பல் வாணிபம் செய்து வெற்றிகரமாக பெரும்பொருளீட்டியவர் . அந்த வாழ்வில் எவ்வளவு பணம் இருந்தாலும் அது பயனற்றது என்ற ஞானம் அவருக்கு உண்டாயிற்று .  காதற்ற ஊசியும் வாராது காண் கடைவழிக்கே என்ற வாசகத்தால் ஆட்கொள்ளப்பட்டார் . ஆதி மூன்று ஆசைகளான மண்ணாசை பொன்னாசை பெண்ணாசை – இவைகளில் ஒன்றை கடந்து விட்டால் அதுவும் ஒரு முக்திதான் . ஆனால் முழுமையல்ல இம்மூன்றையும் கடரும் போதே மரணமில்லாபெருவாழ்வு கிட்டும் . ஒளி சரீரமும் உண்டாகும் . இரண்டாம்கட்ட நிலைதான் ஜீவசமாதி என்பது . தற்காலிகமானது .

பட்டினத்தடிகளாக மண்ணாசை பொன்னாசையை கடந்த ஆத்மாவே பெண்ணாசையை கடர அருணகிரியாராக பிறவியெடுத்தது .

அவருக்கு பரலோக பாக்கியம் உண்டானது என்பதை உணர்த்த மன்னன் மூலமாக ஒரு நிகழ்வு உண்டானது . பரலோகத்திலுள்ள பாரிஜாத மலரை கொண்டுவர மன்னன் வற்புறுத்தியபோது கிளியாக மாறி அவர் பரலோகம் சென்று பாரிஜாத மலரை கொண்டும்வந்தார் .

அப்புறம் சற்குருவுக்கு நன்றி செலுத்தவும் ; பின்னடியார்களுக்கு ஞானம் புகட்டவும் முருகனது ஆணையால் அண்ணாமலை கோவிலில் உள்ள முருகனது தோளில் கிளியாக அமர்ந்து கொண்டு கந்தர் அலங்காரம் என்ற 100 கவிகள் பாடப்பட்டன .

இந்தப்பாடல்கள் அவர் மனித சரீரத்தில் இருந்து பாடியவை அல்ல ஒளி சரீரத்தில் இருந்து பாடியவை ; கடைசி பாடல்கள் என்பதை நிதானித்தால் இவை அருளில் விளைந்த ஞானப்பொக்கிஷம் என்பது விளங்கும் .

அருணகிரியார் காலத்தில் அஞ்ஞானம் மிகுந்து சைவவைணவ சண்டைகள் உச்சத்தில் இருந்தன . ஆனால் முருகன் பரலோகத்தில் ஹரி பூமியிலோ சிவக்குமாரன் ஹரிஹரன் என்ற சமரச வேதத்தை முன்னெடுத்து சமாதானத்தை உண்டாக்கியவர் .

இவரால் அருளப்பட்ட திருப்புகழ் உள்ள அனைத்து பாடல்களும் தமிழகமெங்கும் ஷேத்ராடனம் அங்கு வா இங்கு வா என முருகனால் ஏவப்பட்டு பாடப்பட்டவையாகும் . இந்த பாடல்கள் அனைத்தும் முருகா என ஆரம்பித்து பெருமாளே பெருமாளே என்றுதான் முடியும் . முருகன் ஹரிஹரன் என்பதை நிலைநாட்டும் அக்காலத்திய சமரச வேதம் இது .

இவர் சமரச வேதத்தின் பரம்பரையில் வந்தவர் என்பதாலேயே அதே பரம்பரையில் வந்திருக்கும் அடியேனும் அவர் பாடல்களுக்கு விளக்கம் எழுதும்படியாக இறைவன் செய்விக்கிறார் .

ஒளியில் விளைந்த வுயர்ஞான பூதரத் துச்சியின்மேல்
   அளியில் விளைந்ததொ ராநந்தத் தேனை அநாதியிலே

      வெளியில் விளைந்த வெறும்பாழைப் பெற்ற வெறுந்தனியைத்

         தெளிய விளம்பிய வா! முக மாறுடைத் தேசிகனே.   ...   
   8 

மனிதனின் உச்சந்தலையில் ஒரு சக்கரம் உள்ளது . சரீரத்தின் உச்சியில் உயர்ந்த ஞானத்தை அளிக்க வல்ல சகஸ்ரம் என்ற இந்த சக்கரம் ஆயிரம் இதழ் கொண்ட தாமரையை போன்றது . சரீரத்தின் மூலாதாரத்தில் சுருண்டு கிடக்கும் பாம்பை போன்று குண்டலினி என்ற அருள் சக்தி சகலருக்கும் தூங்கிக்கொண்டுள்ளது . மனிதர்களின் எவ்வகையான செயல்பாட்டின் போதும் அது கொஞ்சம் வெளியேறி இரண்டாம் சக்கரமான குடற்பகுதியில் உள்ள சுவாதிட்டானம் சக்கரம் வரை வரும் . அதற்கு மேல் பல யோகிகளுக்கும் கூட அது உயர்ந்ததில்லை . சும்மா ஏத்துறேன் இறக்குறேன் என பேசிக்கொள்வார்களே தவிர மணிபூரகம் அடைந்தவர்கள் சிலரே . இந்த நிலையை அடைந்தால் முதலாவது ஆவி மண்டல தாக்குதல் உண்டாகி அதனுடன் தாக்குப்பிடிக்க முடியாமல் இறைவனை சார்ந்துகொள்ளும் சரணாகதிக்கு ஒரு நபர் வந்தாகவேண்டும் . ஞானத்தின் வளர்ச்சியால் உண்டாகும் பக்தியோகத்தின் வாசலே ஆவிமண்டல சக்திகளால் கடுமையாக தாக்குதலுக்குள்ளாகி இயலாமையை உணர்ந்து தாழ்மையடைவதே . அதுவரை மனித அறிவை பட்டை தீட்டு எழுந்து நில் விழித்துக்கொள் நம்பு எண்ணத்தை வலிமையாக்கினால் எதையும் சாதிக்கலாம் என சுயத்தை அலட்டிக்கொண்டிருப்பார்கள் . உலக காரியங்களில் பல வெற்றிகளையும் புத்திசாலித்தனத்தையும் காட்டவும் செய்வார்கள் .குடும்பத்தையும் தொழிலையும் நிர்வாகத்தையும் விருத்தியும் செய்வார்கள் . எளிய முறை குண்டலினி யோகம் வாசியோகம் சித்தவித்யை முதலான பல யோகங்கள் மட்டுமே முழுமைக்கு போதுமானதே அல்ல . யாரோ ஒருவர் அடைந்ததை காரணம் காட்டி எல்லாமே முடியும் என அவர்கள் நம்பிக்கொண்டிருப்பதன் பின்னணி அவர்களுக்கு இன்னும் குண்டலினி மணிபூரகத்தை அடையவில்லை என்பதே . மனித அறிவால் பூமிக்குரிய விசயங்களை ; நவீன நாத்திக வாடையுடன் அலப்பித்திரிவார்கள் . அவர்களுக்கு ஆவிமண்டல அனுபவம் என்ற பரத்தின் அடித்தட்டு அனுபவமே உண்டாகவில்லை . உண்டானால் நிச்சயம் பக்திக்குள் வந்தே ஆகவேண்டும் .

இவர்கள் நற்குணங்கள் தீயகுணங்கள் என்பவைகளின் செயல்பாடுகளை படர்க்கையாக பார்க்கிறார்களே தவிர இக்குணங்களின் பின்னணியில் தேவர்கள் அசுரர்கள் என்ற ஆவிமண்டல சக்திகள் செயல்படுகிறார்கள் ; இவர்களே மனிதனுக்குள்ளிருக்கும் இயல்புகளை தூண்டிவிட்டு பல பிரச்சினைகளை உருவாக்குகிறார்கள் என்ற தெளிவுக்குள் யார் வரவில்லையோ அவர்கள் வாயிலேதான் ஆக்ஞை சகஸ்ரம் விசுத்தி அனாகதம் என்று பேசுகிறார்கள் யாரோ சொல்லிக்கொடுத்ததை ஒப்புவிக்கிறார்கள் ஒழிய மணிபூரகத்தை தாண்டவில்லை என்பதே உண்மை .

சரீரத்தை பூத உடம்பென்பார்கள் . ஆத்மாவோ சூக்குமமான சரீரமாகும் . இந்த பூத உடம்பிலேயே மணிபூரகத்திற்கு மேலே குண்டலினி இயங்கினால் அது உயர் ஞான பூதமென்கிறார் அருணகிரியார் . அதாவது பர ஞான பூதம் என்பது அனாகதத்திற்கு மேலே குண்டலினி இயங்குவது . இதற்கு ஒரு அடையாளம் அவர்கள் பக்தியோகம் கைகூடியவர்களாக இருப்பார்கள்

ஆனால் அனாகதத்திற்கு கீழே குண்டலினி இயங்கினாலும் அவர்கள் செயற்கரிய பல செய்தாலும் பூமிக்குரிய ஞான பூதமாகவே இருப்பார்கள் . நவீன நாத்திக வாதத்தை ஆன்மீக சாயலில் பேசிக்கொண்டு கடவுளின் முக்கியத்துவத்தை ஓரங்கட்டுவார்கள் .

அப்படி குண்டலினி இயங்கும் உயர்ஞான பூதரத்து உச்சி சகஸ்ரத்தில் குண்டலினி நிற்கும்போது ஒளி சரீரம் ஆத்மாவில் விளையும் . பிள்ளையார்பட்டிக்கு அருகில் உள்ள வைரவன் கோவிலில் உள்ள மூர்த்தம் பெயர் வளர் ஒளி நாதர் .

அவ்வாறு சகஸ்ரத்தில் குண்டலினி நிற்கும் போது அதன் அடியில் ஆனந்தம் அளிக்கும் தேன் அதாவது அமுதம் விளையும் இடம் ஒன்று இருக்கிறது

நம் வாயிலே நாக்கை மடக்கி அண்ணத்தை தொடும் இடத்திற்கு மேலே ஆக்கினை யிலிருந்து ஒரு கோடும் சகஸ்ரத்தின் கீழே ஒரு கோடும் சந்திக்கிற ஒரு இடம் . இந்த இடத்தையே கண்ணின் மணியை திறக்கிறேன் என தங்கஜோதிஞானசபையினர் உல்ட்டா விடுகின்றனர் . நம் நாக்குக்கு உச்சியிலே சூட்சுமமாக உள்ள அந்த நாக்கே அண்ணாக்கு . தண்ணீரை கடித்து குடிக்காமல் அண்ணாக்க குடி அண்ணாக்க குடி என்று பெரியவர்கள் சொல்வார்கள் ; அப்படி குடிக்கும்போது அந்த இடத்தில் உணர்ச்சி உண்டாகும் . அப்போது அதில் தேன் எதுவும் ஊரியிருந்தால் அது சேர்ந்து உள்ளே சென்றால் மேன்மையுன்டாகும்

இந்த இடத்தைப்பற்றி வள்ளலார் கொடி கட்டிக்கொண்டேன் என குறிப்பால் உணர்த்தியது . அவர் சன்மார்க்க கொடி ஏற்றி வைத்து ஆற்றிய உரையில் :

இதற்குச் சாக்ஷியாக இப்போதுதான் சன்மார்க்கக் கொடி கட்டிக் கொண்டது. அக்கொடி இப்போதுதான் கட்டிக் கொண்டது. அக்கொடி உண்மையில் யாதெனில்: நமது நாபி முதல் புருவமத்தி ஈறாக ஒரு நாடி யிருக்கின்றது; அந்த நாடி நுனியில் புருவமத்தியின் உட்புறத்தில் ஓர் சவ்வு தொங்குகின்றது; அதன் அடிப்புறம் வெள்ளை வர்ணம்; மேற்புறம் மஞ்சள் வர்ணம்; அச் சவ்வின் கீழ் ஓர் நரம்பு ஏறவும் இறங்கவும் இருக்கின்றது; இக்கொடி நம் அனுபவத்தின்கண் விளங்கும். இவ் அடையாளக் குறிப்பாகவே இன்றைய தினம் வெளிமுகத்தில் அடையாள வர்ணமான கொடி கட்டியது. இனி எல்லவர்க்கும் நல்ல அனுபவம் அறிவின்கண் தோன்றும்.
உண்மை சொல்ல வந்தனனே என்று உண்மை சொல்லப் புகுந்தாலும் தெரிந்து கொள்வாரில்லை. கொடி கட்டிக் கொண்டபடியால், இனி எல்லோரும் உண்மையை அறிந்து கொள்வார்கள். முன் உள்ளவர்கள் உண்மையைத் தெரியவொட்டாது மண்ணைப் போட்டு மறைத்து விட்டார்கள். இத்தருணம் ஆண்டவரும் தெரிவித்தார், தெரிவிக்கின்றார், தெரிவிப்பார். நீங்கள் எல்லவரும் உண்மையைத் தெரிந்து கொள்ளுங்கள். இப்போது நான் சொல்லி வந்த பிரகாரம் ஜாக்கிரதையுடன் உண்மையறிவாய் விசாரம் செய்து கொண்டிருங்கள். அவசியம் இதற்குக் காரணமான தயவிருக்க வேண்டியது. அந்தத் தயவு வருவதற்கு ஏதுவான உரிமையும் கூட இருக்க வேண்டும். இப்படி இருந்து கொண்டிருந்தால் ஆண்டவர் வந்தவுடனே எல்லா நன்மையையும் பெற்றுக் கொள்வீர்கள். இது சத்தியம், சத்தியம், சத்தியம். இஃது ஆண்டவர் கட்டளை.


இந்த பரம ரகசியத்தை வெளிப்படையாக கொடி கட்டி கூறிவிட்டேன் ; எனவே இந்த நல்முயற்சியில் அநேகர் முயன்று தேரியும் விடுவார்கள் . வரப்போகிற சமரச சன்மார்க்க சத்தியம் விரைவில் வெளிப்படும் என்பது இந்த உரையின் நம்பிக்கை

ஏனெனில் ஆறாம் திருமுறையை அவர் பதிப்பிக்க ஆர்வம் காட்டவில்லை . ஐந்து திருமுறைகளும் அவர் மேற்பார்வையில் அச்சேற்றப்பட்டன ; ஆறாம் திருமுறையையும் சமரச வேதத்தையும் நீங்கள் புரிந்துகொள்ளும் காலம் வரவில்லை ; அதற்கான சமரச வேதாந்தி வரும்போதே அது நிறைவடையும் என்றார் வள்ளலார் . அந்த நபர் வடலூருக்கு தெற்கே பிறந்து வடலூருக்கு வருவார் அழைத்து வாடி என்று அவரைப்பற்றி முன்னறிவித்தார்

வள்ளலார் சன்மார்க்க சத்திய சங்கம் என்று மட்டுமே பெயர் வைத்திருந்தால் இன்று அவரது சீடர்கள் அடிக்கும் வள்ளலார் சொம்புக்கு போதுமானதாக இருந்திருக்கும் ; ஆனால் அவர் சமரச சன்மார்க்க சத்திய சங்கம் என்று பெயர் வைத்து விட்டு சமரச சத்தியம் இனிமேல் உச்சத்திற்கு வரும் என முன்னறிவித்தது ஏன் என்பதை வள்ளலாரின் சீடர்களால் புரிந்துகொள்ளமுடியவில்லை . ஏனென்றால் ஒரு மார்க்கத்தை மட்டுமே பின்பற்றினால் அதற்கு பெயர் சமரசமில்லை . சமரசம் என்றாலே வேறு வேறாக தெரியும் மார்க்கங்களின் மத்தியில் சமரசம் என்று அர்த்தம் . ஆக அவரவர் மார்க்கத்தை மட்டுமே சொம்படிக்கிறவர்களால் சமரசம் வரவே வராது

இது மட்டுமே சத்தியம் மற்றதெல்லாம் பொய் என்றால் சமரசம் வரவே வராது . இதுவும் உண்மை மற்ற எல்லாவற்றிலும் கடவுளால் வெளிப்படுத்தப்பட்ட சில உண்மைகள் இருக்கத்தான் செய்கின்றன என்ற பார்வை வராமல் சமரசம் வரவே வராது

ஆனாலும் சொல்லாமல் சொல்லி செய்கையால் சமரச வேதத்தின் வித்துகளை வள்ளலார் விதைத்திருக்கிறார் . அது தீவிர சைவர்களாக இருந்த பலரை சிவனையும் கடந்த அருட்பெருஞ்சோதி என்ற அருப ஏக இறைவழிபாட்டுக்கு இட்டு சென்றதுதான் . அந்தக்காலகட்டத்தில் அதிதேவர் சிவனையும் விட பெரியவரான அல்லா என்று வெளிப்படையாக சொல்லாமல் உருவ வழிபாட்டிலிருந்து அருவ வழிபாட்டுக்கு சைவர்களை மாற்றியது சமரச வேதம் . சைவத்தில் இப்போதும் யுக முடிவு ஆண்டவர் வருகை என்ற வைணவ கோட்பாடுகள் ஏற்புடையதல்ல ; ஆனால் சைவர்களான தனது சீடர்களுக்கு ஆண்டவர் வரும் காலம் வரை நல்ல முயற்சியில் இருங்கள் என்று கல்கி  வருகையை ஏற்புடையதாக்கியதும் ஒரு சமரசமே .

ஆதியில் வள்ளலார் முருகனின் குருகுலத்தில் வளர்ந்தவர் ; கண்ணாடியின் முன்பு அமர்ந்து தவம் செய்யும்போது கண்ணாடியில் முருகனின் அருட்காட்சி கண்டவர் . அந்த சற்குரு முருகன் ஆறு முகமுடையவன் அதாவது சன்முகன் . சன் என்றால் ஆறு என்று பொருள் . சன்மார்க்கம் என்றால் ஆறு மார்க்கம் என்றும் பொருள் . இவ்வுலகிலுள்ள எல்லா மார்க்கங்களும் ஆறு பெரும் பிரிவுகளில் அடக்கிவிடலாம் . அவை எல்லாவற்றிற்கும் ஞான சற்குரு ஆறு குழந்தைகள் ஒரே குழந்தையாக மாறிய முருகன் . ஆறு குழந்தைகளும் வேறு வேறு குழந்தைகள் . ஆனால் ஒரே குழந்தையாக மாற்றப்பட்டன . அதுபோல இந்த ஆறு மார்க்கங்களையும் சமரசம் செய்யும் சத்திய சங்கமே வள்ளலாரின் சமரச சன்மார்க்க சங்கம் .

இப்பாடலிலும் முருகன் ஆறு வேறு வேறான முகங்களின் தேசியமான ஒரு முகமுடையவன் என்ற சமரசம் வேதம் உள்ளது . தேசியம் என்றால் பல வேறுபாடு உள்ள நாடுகளின் ஒன்றியம் என்று பொருள் . இந்திய தேசிய நீரோட்டத்தில் மொழி வாரி இனங்கள் பல ஒரு நாடாகவே  ஒருங்கிணைக்கப்பட்டுள்ளன . முருகனை ஏன் தேசிகன் என்கிறார்கள் என்றால் அவன் வெவ்வேறு போல இருக்கும் ஆறு மார்க்கங்களுக்கும் சற்குரு அத்தோடு அவனே சமரச வேதத்திற்கும் சற்குருவானவன் . மேலும் மனிதன் முழுமையடைவதற்கு யோக சாதனையும் வேண்டும் பக்திசாதனையும் வேண்டும் இரண்டின் உன்னதம் சங்கமிக்கும்போது மட்டுமே சித்தியடைய முடியும் என்ற உண்மையை விளம்பியவன் சமரச வேத முகத்தினன் முருகன் என்கிறார் அருணகிரியார்

முழுமையடையும் போது யோகத்தின் முதிர்வான அண்ணாக்கில் அமிர்தம் ஊறும் சித்தி நிலை கிட்டும் அதோடு கடவுளைப்பற்றிய அநாதியான ரகசியம் தெளியவைக்கப்படும்

அந்த மறைபொருளானது ; அநாதியிலே வெற்று வெளியாக தனித்தவனாக அருவ இறைவன் இருந்தார் . அது பூமியையும் அதனைத்தாங்கியுள்ள பால்வெளி மண்டலத்தை பெற்றது அல்லது படைத்தார் என்பதுதான் .

படைக்கப்பட்ட அனைத்தும் பால்வெளி மண்டலத்திற்குள் அடக்கம் . சகல நட்சத்திர மண்டலங்களும் பால்வெளிக்குள் மட்டுமே உள்ளன . அந்த பால்வெளிக்கு வெளியிலோ பல மடங்கு பெரிய அளவிடமுடியாத வெட்டவெளிதான் உள்ளது

அதிதேவர்கள் நால்வர் முதலான தேவர்கள் அசுரர்கள் நட்சத்திரங்கள் கிரகங்கள் மனிதர்கள் விலங்குகள் அனைத்தும் படைக்கப்பட்டவையே .பால்வெளிக்குள் மட்டுமே உள்ளனர் . இவையனைத்தையும் விட வெட்டவெளியோ பல மடங்கு பெரியது என்றால் அவை அனைத்தையும் அடக்கிய கடவுள் நாம் பார்த்த எவருமே அல்ல . அவர் அருவமானவர் அனாதியானவர் .தனித்தவர் . தனித்தவர் என்றால் பிரபஞ்சம் அனைத்திற்கும் அப்பாற்பட்டவர் . அவர் கடவுள் மட்டுமே . அவரையே அரபு மொழியில் அல்லா என்றும் யூதபாஷையில் எல்லா என்றும் சொல்கிறார்கள் .

நாம் அறிந்த அனைத்து தெய்வங்களையும் விட தனித்தவரான அந்த கடவுளை பற்றி முருகன் சிவனுக்கும் தெளியவைத்தாராம் .

சிவன் ஓம் என்ற மந்திரத்தின் உட்பொருளை மறந்துவிட்டார் . அதை முருகன் சிவனின் காதில் ரகசியமாக ஓதினார் ; அதனால் அவர் தகப்பனுக்கே குருவானார் என்றார்கள் . ஆனால் கொடுமை என்னவென்றால் முருகன் சிவனுக்கு சொன்ன ஓம் என்பதின் பொருள் என்ன எனக்கேட்டால் அது பிரணவமந்திரம் அதை முருகனே சிவனின் காதில் ரகசியமாக ஓதிவிட்டார் என்பார்கள் . எங்களுக்கு தெரியாது என்பதை ஒத்துக்கொள்ள மாட்டார்கள் .

அந்த ரகசியம் சமரச வேதத்தால் மட்டுமே விளக்கப்பட வல்லது . சமரச வேதத்தின் உயிர் மூச்சுமானது .

சன்மார்க்கிகளால் புரிந்துகொள்ள முடியாதது
சமரச சன்மார்க்கிகளால் மட்டுமே புரிந்துகொள்ள கூடியது

ஓம் என்றால் ஓரிறைவனையே துதிக்கிறோம் ; ஓரிறைவனையே நமஸ்கரிக்கிறோம் என்பதாகும் . பால்வெளியில் தேவர்களால் இம்மந்திரமே உச்சரிக்கப்பட்டு பிரணவ மந்திரமாக சுற்றி சுழன்று வருகிறது

இது பீஜ மந்திரம் என்றால் யார் மூலமாக துதிக்கிறோம் என்பதை அந்தந்த குருகுலத்தினர் சேர்த்துக்கொள்ளலாம் .

நாராயணனாக வெளிப்பட்ட ஓரிறைவனையே நமஸ்கரிக்கிறோம்
ஓம் நமோ நாராயணனாய

ஆதிசேஷனாக வெளிப்பட்ட ஓரிறைவனையே நமஸ்கரிக்கிறோம்
ஓம் நமோ ஆதிசேஷாய

நாராயணியாக வெளிப்பட்ட ஓரிறைவனையே நமஸ்கரிக்கிறோம்
ஓம் நமோ நாராயணியாய

சிவனாக வெளிப்பட்ட ஓரிறைவனையே நமஸ்கரிக்கிறோம்
ஓம் நமோ சிவாய

அருட்பெருஞ்சோதி அருட்பெருஞ்சோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்சோதி